கோலாலம்பூர், டிச.13-
நாட்டின் நான்காவது பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர் முகமது செய்துள்ள தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கருத்தில் கொண்டு அவர் மீது போலீஸ் புகார் செய்ய வேண்டாம் என்றும், குற்றவியல் வழக்குத் தொடுக்க வேண்டாம் என்றும் பரிந்துரைத்துள்ள பிகேஆர் கட்சியின் பாசீர் கூடாங் எம்.பி. ஹஸான் அப்துல் கரீம், தற்போது கேள்வி கணைகளால் வறுத்து எடுக்கப்பட்டு வருகிறார்.
மலேசிய மக்களுக்காக துன் மகாதீர் நெடுஞ்சாலையை நிர்மாணித்தார், புத்ராஜெயாவை உருவாக்கினார் என்று கூறி, அந்த முன்னாள் பிரதமருக்காக பரிதாபப்பட்டு வரும் அந்த பிகேஆர். எம்.பி. ஹஸான், இந்த நாட்டிற்காக சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த துங்கு அப்துல் ரஹ்மானை விடவா, துன் மகாதீர் பெரிய தியாகத்தை செய்து விட்டார் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் முகமட் புவாட் ஸர்காஷி கேள்வி கணைகளால் துளைத்துள்ளார்.
பத்து பூத்தே தீவு, சிங்கப்பூரிடம் தாரை வார்த்துக்கொடுப்பதற்கு காரணமானவர் துன் மகாதீர் என்று கூறி, அவர் மீது குற்றவியல் வழக்கை தொடர்வதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அனைத்துலக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மலேசியா மேல்முறையீடு செய்ய வேண்டியதில்லை என்று கூறி, நாட்டின் பிரதமர் என்ற முறையில் துன் மகாதீர் தன்னிச்சையாக முடிவு எடுத்தது பெரிய தவறு அல்லவா? என்று புவாட் ஸர்காஷி வினவினார்..
வியூகம் நிறைந்த பத்து பூத்தே தீவு பறிபோனதைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் துன் மகாதீர்தான், ஒரு காலத்தில் துங்கு அப்துல் ரஹ்மான், சிங்கப்பூரை, லீ குவான் இயூவிடம் விற்று விட்டதாக கூறி, மலேசிய இறையாண்மை பறிபோய் விட்டது என்று குற்றஞ்சாட்டி / நீலிக் கண்ணீர் வடித்தார் என்பதை ஹஸான் அப்துல் கரீம் மறந்து விடக்கூடாது என்று அந்த அம்னோ தலைவர் நினைவூட்டினார்.








