பாரிசான் நேசனல், பெரிக்காடன் நேசனல் இடையிலான கூட்டணி நீண்ட காலம் நீடிக்காது என்று பெசாத்து தலைவர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, அம்னோ மற்றும் பாஸ் தலைமையிலான இந்த இரு கூட்டணிகளும் வடக்கு மாநிலங்களில் கடுமையாக மோதும் என்றும் அவர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
தற்போது பாஸ், அம்னோவுடன் இணக்கமாக இருப்பது, தொகுதி ஒதுக்கீட்டு மோதல்களைத் தவிர்ப்பதற்காகவும், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு அரசியல் ரீதியாக வெளிப்படுத்தப்படும் நல்லுறவாக மட்டுமே உள்ளது என்றும் முகைதீன் தெரிவித்துள்ளார்.
மேலும், வடக்கு மாநிலங்களில் தாங்கள் ஆளும் பகுதிகளில் அம்னோ போட்டியிடக்கூடாது என்பதே பாஸ்-இன் நோக்கம் என்றும், ஆனால், இறுதியில் அம்னோ, பாஸ்-ஐ எதிர்த்து போட்டியிடும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெகிரி செம்பிலான்-இல் இப்போது இரு கட்சிகளும் கட்டித்தழுவி நட்பைக் காட்டினாலும், அதன் பிறகு அவர்களுக்குள் பிரச்சினைகள் உருவாகும். வடக்கு மாநிலங்களில் இந்த நிலைமை தொடராது என்றும் முகைதீன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாரிசான், பெரிக்காத்தான் இடையே தற்போது காணப்படும் நல்லுறவை உண்மையான கூட்டணியாகக் கருத வேண்டாம் என்றும், அது மாநிலத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் அரசியல் வியூகம் மட்டுமே என்றும் நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு முஹிதீன் யாசின் அறிவுறுத்தியுள்ளார்.








