கோலாலம்பூர், செப்டம்பர்.17-
நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மையைக் கூட பெற முடியாத அரசியல் கட்சிகள் பிரதமர் வேட்பாளரை அறிவிப்பதில் அவசரப்படுவதற்கு அர்த்தமே இல்லை என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மலாய்க்காரர்கள் ஒன்றுபட்டால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும், வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் பிரதமரைத் தேர்வு செய்யலாம் என்றும் இன்று தனது முகநூல் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவிக்கான வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பில், போட்டியிட்டு வரும் பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு இடையிலான சமீபத்திய நிலைப்பாடுகளையும் அவர் விமர்சித்துள்ளார்.
எந்தக் கட்சியும் குறைந்தது 112 இடங்களை வென்றால் தான் பிரதமராக முடியும் என்றும், பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுபவர்கள் எல்லாம் உண்மையில் பிரதமராவது சாத்தியமில்லை என்றும் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.