Sep 25, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்
அரசியல்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

Share:

நெகிரி செம்பிலான் அரசியல் மற்றும் அரசமைப்பு நெருக்கடிக்கு முந்தைய பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசுதான் காரணம் எனக் கூறுவதை நிறுத்துமாறு முன்னாள் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருன், தற்போதைய மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமுக்கு சவால் விடுத்துள்ளார்.

முந்தைய அரசு அரசமைப்புச் சட்டத்தை மீறியதாகக் கூறினால், எந்த நடவடிக்கையில் தவறு ஏற்பட்டது, 1959 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசமைப்பின் எந்தப் பிரிவு மீறப்பட்டது, அது எப்போது நடந்தது என்பதை ஆதாரங்களுடன் மக்களுக்கு விளக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதியிட்ட ஆட்சியாளர் பதவி தொடர்பான பிரகடனம், தாம் மந்திரி பெசாராக இருந்தபோது ஏப்ரல் 20 ஆம் தேதி கையெழுத்திட தம்மிடம் வழங்கப்பட்டதாகவும், அதன் நடைமுறை குறித்து சந்தேகம் இருந்ததால் தாம் கையெழுத்திடவில்லை என்றும் அமினுடின் தெரிவித்தார்.

அதே ஆவணத்தில் தமக்குப் பின்னர் மந்திரி பெசாரான இஸ்மாயில் லாசிம், ஏன் கையெழுத்திட்டார் என்பதுதான் மக்களுக்கு விளக்கப்பட வேண்டிய முக்கியக் கேள்வி என்றும் அவர் கூறினார்.

அரசமைப்பின் 10 ஆவது பிரிவின்படி தேவையான முழுமையான விசாரணை உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பது தெளிவாகவில்லை என்றும் அமினுடின் குறிப்பிட்டார்.

இதனிடையே, அந்தப் பிரகடனம் செல்லாது என்றும், மந்திரி பெசாருக்கும் மாநில ஆட்சிக்குழுவுக்கும் யாங் டி-பெர்துவான் பெசார் பதவியைத் தன்னிச்சையாக காலியாக்கும் அதிகாரம் இல்லை என்றும் சட்டத்துறைத் தலைமை அலுவலகம் செப்டம்பர் 17 ஆம் தேதி தெரிவித்திருந்தது.

Related News