தாவாவ், நவம்பர்.10-
தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவிலிருந்து விலகும் திட்டத்தை டத்தோ எவோன் பெனெடிக் முன்கூட்டியே கோடி காட்டி, அவசரமாகச் செயல்பட்டு விட்டார் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சபா மாநிலத்தின் 40 விழுக்காட்டு வருவாய் உரிமை குறித்து கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா? இல்லையா? என்பது குறித்து அரசாங்கம் இன்னும் தீர்க்கமாக முடிவு செய்யவில்லை. இவ்விவகாரம் இன்னமும் ஆய்வில் உள்ளது என்று பிரதமர் விளக்கினார்.
சபா மாநிலத்தின் உரிமை தொடர்பில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல்முறையீடு செய்யுமானால், அமைச்சர் பதவியிலிருந்து எவோன் பெனெடிக் பதவி விலக வேண்டும் என்று தாம் தலைமையேற்றுள்ள UPKO கட்சி எடுத்துள்ள தீர்மானத்திற்கு ஏற்ப அமைச்சர் பதவிலிருந்து விலகுவதற்கு அந்த சபா அரசியல்வாதி முடிவெடுத்தார்.
சபா மாநிலத்தின் தன்னாட்சி உரிமை சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சட்டத்துறை அலுவலகம் அறிவித்ததன் எதிரொலி, UPKO கட்சி இந்த முடிவை எடுத்தது.








