கோலாலம்பூர், டிசம்பர்.07-
இன்று நடைபெற்ற மலேசியச் சீனச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், அடுத்த பொதுத் தேர்தலில் கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக டிஏபி கட்சியுடன் கூட்டணி சேரப் போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய முன்னணியில் உள்ள வேறு எந்தக் கட்சியாவது டிஏபியிடன் கூட்டு சேர்ந்தால், தேசிய முன்னணியின் உணர்வு செத்து விட்டது என்று அறிவித்து, மசீச தனது சொந்தப் பாதையைத் தானே தீர்மானிக்கும் என்று அதன் தலைவர் வீ கா சியோங் உறுதியாகக் கூறினார்.
குறிப்பாக, டிஏபி போன்ற வெளிப்புறக் கட்சிகளுடன் அம்னோ தொடர்ந்து ஒத்துழைத்தால், தேசிய முன்னணியில் மசீச தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யும் என்றும், தங்கள் கட்சியின் நலன்களைக் காக்கச் சரியான முடிவை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார். இதனுடன், கல்வி அமைச்சரின் செயலைக் கண்டிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பள்ளிகளில் சீர்திருத்தத்தைக் கொண்டு வரத் தவறுவது, சீனப் பள்ளிகளுக்குச் சவால்கள், நிதிப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளுக்காகவும் அவர் விமர்சிக்கப்பட்டார். இத்தகைய கொள்கை முடிவுகள், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மசீச அனைத்து இடங்களிலும் போட்டியிடுவதைத் திட்டமிடுவதையும், அதன் மூலம் மக்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.








