மலாக்கா தேர்தலுக்கான பாரிசான் நேஷனல் வேட்பாளர் பட்டியல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேட்பாளர் அறிவிப்பில் மசீச கட்சிக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, அடுத்த வாரம் வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு முன்பாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில் வேட்பாளர் பட்டியலில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று குறிப்பிட்டுள்ள ஸாஹிட், வேட்பாளர்களுக்கான அங்கீகாரக் கடிதங்களில் தாம் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றார்.
மேலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் நிகழ்ச்சி குறித்து மசீச தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் முன்கூட்டியே தெரிவிக்காததால் ஆச்சரியமடைந்தது உண்மை தான் எனக் குறிப்பிட்ட ஸாஹிட், இந்தப் பிரச்சினை அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறவுள்ள வேட்புமனுத் தாக்கல் தினத்துக்கு முன்பாகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.








