புத்ராஜெயா, நவம்பர்.17-
வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் பிஎச் எனப்படும் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையேற்கவிருக்கிறார்.
பிஎச் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் அதன் சார்பில் போட்டியிடுகின்றவர்களை ஆதரித்து அன்வார் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று பிரதமரின் பத்திரிகைச் செயலாளர் தெங்கு நஷ்ருல் தெங்கு அபைடா தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை சபாவிற்கு இரண்டு நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்ட பிரதமர், தற்போது கோலாலம்பூருக்குத் திரும்பியுள்ள வேளையில் மீண்டும் ஒரு முறை சபாவிற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார் என்று அவர் குறிப்பிட்டார்.
சபா சட்டமன்றத் தேர்தலில் 73 தொகுதிகளில் மொத்தம் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.








