கோலாலம்பூர், டிசம்பர்.30-
பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக டான் ஶ்ரீ முகைதீன் யாசின் இன்று அறிவித்துள்ளதையடுத்து, அப்பதவிக்கு தனது கட்சியைச் சேர்ந்த ஒருவரை முன்மொழிய பாஸ் முடிவு செய்துள்ளது.
கூட்டணியிலுள்ள அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து அணி திரட்டும் ஆற்றல் கொண்ட ஒருவர் அப்பதவிக்கு முன்மொழியப்படுவார் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அஹ்மாட் ஃபாஹ்லி ஷாரி தெரிவித்துள்ளார்.
கூட்டணித் தலைவராகப் பதவி ஏற்கவிருப்பவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ள அஹ்மாட் ஃபாஹ்லி, எதிர்வரும் 16-வது பொதுத்தேர்தலுக்கு கூட்டணியை திறம்பட வழிநடத்திச் செல்லும் ஆற்றல் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் விவரித்துள்ளார்.
அதே வேளையில், முகைதீன் யாசின் தான் பதவி விலகும் முடிவை சரியான நேரத்தில் எடுத்துள்ளதாகவும் அஹ்மாட் ஃபாஹ்லி தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.








