Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை
அரசியல்

மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.02-

ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பிகேஆர் கட்சி சந்தித்த பின்னடைவுகளை கருத்தில் கொண்டு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தை அவசரமாகக் கலைத்து, 16-வது பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் காரிம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனது முழு பதவிக் காலத்தையும் நிறைவு செய்து, செயல்படுத்தி வரும் கொள்கைகளின் பலன்களை மக்கள் உணரும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிகேஆர் கட்சியானது, நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளை அமைதியாக ஆய்வு செய்து, 16-வது பொதுத் தேர்தலுக்கான புதிய வியூகங்களை உருவாக்க வேண்டும் என்றும், சற்று ஓய்வுக்குப் பிறகு அடுத்த தேர்தலுக்கான சிறந்த திட்டத்தை வகுக்க வேண்டும் என்றும் ஹசான் காரிம் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கம் வரும் 2027 -ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது 2028-ஆம் ஆண்டு தொடக்கம் வரையிலோ தனது ஆட்சிக் காலத்தை நிறைவு செய்தால், பொருளாதாரக் கொள்கைகளின் தாக்கம் வெளிப்படையாகத் தெரியும் என்றும், மக்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிட முடியும் என்றும் அவர் விவரித்துள்ளார்.

அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் மக்கள் நம்பிக்கையை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஹசான் காரிம் வலியுறுத்தியுள்ளார்.

Related News