போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கின் ராஜினாமா முடிவை ஏற்கும் முன், அவரை நேரில் சந்தித்து கருத்தைக் கேட்கவுள்ளதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பைத் தொடர்ந்து, பதவி விலகும் தனது விருப்பத்தை அந்தோணி லோக் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்கவில்லை என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் அந்தோணி லோக் கொள்கை பிடிப்பில் உறுதியானவர் என்றும், ஊழல் விவகாரங்களில் அரசாங்கம் பலவீனமாகவோ அல்லது தளர்வாகவோ இருப்பதாகத் தோன்றக்கூடிய நடவடிக்கைகளை அவர் தொடக்கம் முதலே எதிர்த்து வந்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் அந்தோணி லோக்கை சந்தித்து அவரது நிலைப்பாட்டை கேட்ட பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்று ஷா ஆலமில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரவை கலைக்கப்படுமா? என அன்வாரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, தற்போது தாம் ஒவ்வொரு விவகாரமாக அணுகி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அந்தோணி லோக் நாளை திங்கிட்கிழமை ஷாங்ஹாய் செல்லவுள்ளதாகவும், அவரைத் தொடர்ந்து அன்வார் வரும் செவ்வாய்க்கிழமை ஷாங்ஹாய் சென்று சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் பதவியில் இருந்து அந்தோணி லோக் விலகினாலும் கூட, ஜசெக கட்சியின் பொதுச் செயலாளராகவும் சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினராகவும் தொடரவுள்ளார்.
அதேவேளையில் மற்ற ஜசெக கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களும் அரசாங்கத்தில் தொடர்ந்து பதவி வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








