கோலாலம்பூர், டிசம்பர்.23-
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் ரஸாக்கிற்கு முழு அரச மன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் என்று ஜசெக முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஒங் கியான் மிங் பரிந்துரை செய்துள்ளார்.
நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்கு இதுவே சரியான தருணம் என்று ஒங் கியான் மிங் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் அரசியல் பிளவுகளைக் குறைக்கவும், அரசியல் முதிர்ச்சியை ஊக்குவிக்கவும் நஜீப்பிற்கு முழு மன்னிப்பு வழங்குவது ஓர் “அரசியல் மறுசீரமைப்பாக" அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-ஆம் ஆண்டில் நஜீப்பிற்கு பொது மன்னிப்பு வழங்குவது என்பது ஜசெக.விற்கு சிவப்புக்கோடு என்ற மீறக்கூடாத எல்லை என்று தான் முன்பு கூறியிருந்ததை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி மீதான வழக்குகள் கைவிடப்பட்ட பிறகு, தம்முடைய அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஒங் கியான் மிங் குறிப்பிட்டுள்ளார்.
72 வயதாகும் நஜீப், ஏற்கனவே மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும், அரசியல் பழிவாங்கல்களைத் தவிர்க்கவும் இந்த முடிவு உதவும் என்று ஒங் கியான் மிங் கருத்துரைத்தார்.
கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, "மன்னித்தல்" என்ற அடிப்படையில், கடந்த காலத் தவறுகளை மறக்காமல் அதே சமயம் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காகச் சமரசத்தை நோக்கி நகர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








