கோலாலம்பூர், நவம்பர்.20-
ஆப்பிரிக்க நாடுகளுக்கு வர்த்தகப் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை தென்னாப்பிரிக்க அதிபர் Matamela Cyril Ramaphosa-வை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இப்பேச்சு வார்த்தையில், பாலஸ்தீன விவகாரம், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத் தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெறவுள்ளன.
வரும் நவம்பர் 22-ஆம் தேதி துவங்கவுள்ள G20 தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள, அன்வார் இன்று வியாழக்கிழமை Johannesburg நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அவருடன் மலேசியப் பேராளர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இதனிடையே, நாளை தென்னாப்பிரிக்க அதிபர் உடனான சந்திப்பின் போது, காஸாவில் நடக்கும் வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்ற மலேசியாவின் உறுதியான நிலைப்பாட்டை, அன்வார் வெளிப்படுத்துவார் என தென்னாப்பிரிக்காவிற்கான மலேசியத் தூதர் டத்தோ யுபாஸ்லான் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
மலேசியா நீண்ட காலமாக இனவெறி தொடர்பான அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வரும் நிலையில், இப்போது காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களின் உரிமைக்காக மலேசியாவும் தென் ஆப்பிரிக்காவும் இணைந்து குரல் கொடுக்கவுள்ளன.
இந்த ஒரே மனநிலை தான் இரு நாடுகளின் உறவை இன்னும் வலுப்படுத்துகிறது என்று டத்தோ யுபாஸ்லான் யுசோஃப் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில், குறிப்பாக கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையிலுள்ள புதிய வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








