கோத்தா கினபாலு, நவம்பர்.05-
சபா மாநிலத்தைப் பிளவுப்படுத்தக்கூடிய இனத் துவேஷ அரசியலை உடனடியாக நிறுத்துமாறு வாரிசான் கட்சித் தலைவர் முகமட் ஷாஃபி அப்டால் கேட்டுக் கொண்டார்.
இம்மாதம் இறுதியில் சபா மாநிலம், சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிய வேளையில் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு இனத் துவேஷத் தன்மையிலான அரசியல் தலைத்தூக்கியிருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சருமான ஷாஃபி அப்டால் குறிப்பிட்டார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சபா மாநிலத்தின் மக்களின் ஒற்றுமையை முன்நிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டுமே தவிர சபா மாநிலத்தில் பிரிவினையையும், பேதங்களையும் விதைக்கக்கூடிய இனத் துவேஷத் தன்மையிலான பிரச்சாரங்கள் அல்ல என்று ஷாஃபி அப்டால் வலியுறுத்தினார்.
சபா மாநிலத்தில் இன ரீதியான அரசியலுக்கு அடித்தளமிடப்பட்டால் அம்மாநிலம் பிளவுப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக கோத்தா கினபாலுவில் ஆற்றிய உரையில் ஷாஃபி அப்டால் குறிப்பிட்டுள்ளார்.








