டிச. 15-
வரும் மாதம் தொடங்க உள்ள தேசியச் சேவைப் பயிற்சித் திட்டம் – PLKN 3.0-ன் பங்கேற்பாளர்களுக்கான அன்றாட உபகாரச் சம்பளத் தொகை 8 ரிங்கிட்டாகவே தொடரும் என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது காலிட் நோர்டின் தெரிவித்தார்.
இத்திட்டம் இன்னும் தொடங்கப்படாத நிலையில்து, அதன் உபகாரச் சம்பளத்தை உயர்த்துவது சரியானதல்ல என்றார்.
தேசியச் சேவைப் பயிற்சித் திட்டம் தொடங்கிய பிறகுதான் இந்த விவகாரம் மீண்டும் பரிசீலிக்கப்படும். கடந்த வியாழக்கிழமை, நாடாளுமன்றத்தின் சிறப்புத் தேர்வுக்குழு இத்திட்டம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததில், பங்கேற்பாளர்களுக்கான அன்றாட உபகாரச் சம்பளம் 50 ரிங்கிட்டாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
8 ரிங்கிட் உபகாரச் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்கு ஊக்கத்தொகை உயர்த்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. PLKN 3.0 வரும் ஜனவரி 12 ஆம் தேதி, முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதில் கோலாலம்பூர், பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள இரண்டு இராணுவ முகாம்களில் சுமார் 500 பேர் பங்கேற்பார்கள். 2026-ம் ஆண்டு இத்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது நாடு முழுவதும் உள்ள 13 முகாம்களுக்கு இது விரிவுபடுத்தப்பட உள்ளது.
PLKN 3.0-ல் பங்கேற்பாளர்கள் மத்தியில் வன்முறை சம்பவங்களைத் தடுக்க முடியும் என்று அமைச்சு நம்புவதாகத் தெரிவித்த காலிட் நோர்டின், 2 மாதங்களுக்கு மேல் இத்திட்டம் நடைபெறாது, அதாவது 45 நாட்கள் மட்டுமே நடத்தப்படுவதாலும், இராணுவ முகாம்களிலேயே இது நடத்தப்படுவதாலும் வன்முறை சம்பவங்கள் நிகழ வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.








