ஷா ஆலாம், டிச. 10-
மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரபுடின் இட்ரிஸ் ஷாவை நிந்திக்கும் தன்மையில் உரைநிகழ்த்தியது தொடர்பில் தேச நிந்தனைக்குற்றச்சாட்டு வழக்கை எதிர்நோக்கியிருந்த கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சனூசி முகமட் நோர், ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டார்.
50 வயதான சனூசிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டிலிருந்தும், வழக்கிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்படுவதாக உயர் நீதிமன்றம் அறிவித்தது.
தமக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு தேச நிந்தனை குற்றச்சாட்டுகளை ரத்து செய்யுமாறு சனூசி செய்து கொண்ட பிரதிநிதித்துவ மனுவிற்கு சட்டத்துறை அலுவலகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக பிராசிகியூஷன் தரப்பினர் தெரிவித்ததைத் தொடர்ந்து சனூசியை விடுதலை செய்வதாக நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுதீன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜுலை 11 ஆம் தேதி இரவு 11 மணியளவில் சிலாங்கூர், கோம்பாக், தாமான் செலாயாங், கம்போங் பெண்டஹராவில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் தேச நிந்தனை தன்மையில் உரையாற்றியதாக சனூசிக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.
எனினும் அரசியல் கண்ணியத்தை மீறி தேச நிந்தனை தன்மையில் தாம் ஆற்றிய உரைக்காக சிலாங்கூர் சுல்தானிடம், சனூசி பகிரங்கமாக மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து அவருக்கு சில நினைவுறுத்தல்களுடன் அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி சுல்தான் அறிவித்தார்.
இரு தேச நிந்தனை குற்றச்சாட்டுகளிலிருந்து சனூசி விடுதலை செய்யப்பட்ட போதிலும் பாஸ் கட்சியின் முன்னணி தலைவரும், தேர்தல் இயக்குநருமான அவர், தேச நிந்தனை தொடர்பில் மற்றொரு குற்றச்சாட்டு வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.








