கோலாலம்பூர், டிச.6-
ஜோகூர் கடற்பகுதியில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, மலேசியாவிடமிருந்து பறிபோவதில்லிருந்து தடுப்பதற்கு அந்த தீவின் ஒவ்வொரு அங்குல நிலமும் காப்பாற்றப்படுவதற்கு கடுமையாக போராடியிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.
பத்து பூத்தே தீவு பறிபோன விவகாரத்தில் புரியப்பட்ட குற்றமானது, நாட்டிற்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது. உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
பத்து பூத்தே பவளப்பாறைத் தீவு மற்றும் Middle Rocks, South Ledge ஆகிய தீவுகளின் இறையாண்மை தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அரச ஆணையம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.
இதன் தொடர்பில் பத்து பூத்தே தீவை இழப்பதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்வது உட்பட அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
அரச விசாரணை ஆணையத்தின் இந்த முடிவு தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.








