Feb 23, 2026
Thisaigal NewsYouTube
மடானி  அரசாங்கத்தால் அரசியல் நிலைத்தன்மையை நிலைநிறுத்த முடியும்: சைஃபுடின் நசுத்தியோன் உறுதி
அரசியல்

மடானி அரசாங்கத்தால் அரசியல் நிலைத்தன்மையை நிலைநிறுத்த முடியும்: சைஃபுடின் நசுத்தியோன் உறுதி

Share:

அலோர் ஸ்டார், பிப்ரவரி.23-

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையைத் தக்கவைத்து, தலைமைத்துவத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு சுங்கை பட்டாணியில் நடைபெற்ற கெடா மாநில பிகேஆர் தலைமைத்துவ மன்றக் கூட்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் பேசிய சைஃபுடின், கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டரசு அரசாங்கம் தனது திறமையான நிர்வாகத்தால் அரசியல் நிலைத்தன்மையை நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மலேசியா மூன்று பிரதமர்களைக் கண்ட நிலையில், தற்போது அன்வார் இப்ராஹிமின் கீழ் ஒரே சீரான தலைமைத்துவத்தின் கீழ் நாடு இயங்கி வருவதைச் சுட்டிக் காட்டிய அவர், "மற்றவர்களின் பலவீனத்தால் நாம் வலுவடையவில்லை; நமது சொந்த பலத்தை நாம் கட்டமைப்பதன் மூலமே வலிமை பெற்றுள்ளோம்" என்று கூறினார். மேலும், நாட்டின் நேர்மறையான பொருளாதாரக் குறிகாட்டிகள் இந்த நிலைத்தன்மைக்குச் சான்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் சாதனைகளை எளிமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதே தற்போதைய முக்கிய சவால் என அவர் கூறினார். இதன் மூலம், தற்போதைய நிர்வாகத்தைத் தொடர்வதால் மக்களுக்குக் கிடைக்கும் நன்மைகளை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும் என அவர் நம்புகிறார்.

கெடா மாநில மேம்பாட்டு நடவடிக்கைக் குழுவின் இணைத் தலைவரான சைஃபுடின், கூட்டரசு அரசாங்கம் எப்போதும் மாநிலத்தின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகத் தெரிவித்தார். மாநிலத்தில் எதிர்க்கட்சியாகச் செயல்பட்டாலும், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் மாற்றுத் திட்டங்களை முன்வைப்போம் என்றும், மக்கள் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கொண்டு தகுந்த முடிவை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

Related News