கங்கார், ஜனவரி.02-
பெர்லிஸ் மாநிலத்தின் குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ரிட்ஸுவான் ஹாஷிம், பிந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஃபக்ருல் அன்வார் இஸ்மாயில், சூப்பிங் சட்டமன்ற உறுப்பினர் Saad Seman ஆகிய மூவரும், தங்கள் பதவிகளைக் காலி என அறிவித்த சபாநாயகரின் முடிவை எதிர்த்து அதிகாரப்பூர்வமாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். கடந்த டிசம்பர் 24-ல் பாஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களின் இடங்கள் காலியானதாக சபாநாயகர் Rus'sele Eizan அறிவித்திருந்தார். ஆனால் இஃது அதிகார வரம்பை மீறிய செயல் என அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் வாதிடுகின்றனர்.
அடுத்த மாநிலத் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், மக்கள் பிரதிநிதி இல்லாமல் தொகுதி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்தச் சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயார் என அறிவித்துள்ள சபாநாயகர், "சட்டமன்ற விதிகளின்படியே நான் செயல்பட்டேன், வழக்குத் தொடர்வது அவர்களின் உரிமை" எனத் தெரிவித்துள்ளதால் பெர்லிஸ் அரசியலில் பரபரப்பு கூடியுள்ளது!








