கோத்தா பாரு, டிசம்பர்.06-
லஞ்ச ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, கைது செய்யப்பட்டுள்ள பாஸ் கட்சியைச் சேர்ந்த பாடாங் செராய் எம்.பி. மீதான விசாரணையைத் தாங்கள் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் - மிடமே விட்டு விடுவதாக பாஸ் கட்சி பொதுச் செயலாஆளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட எம்.பி. யின் எஸ்பிஆர்எம் விசாரணையில் பாஸ் கட்சி தலையிடாது. சட்ட நடைமுறையின் கீழ் இவ்விவகாரம் கொண்டுச் செல்லப்படுவதைப் பாஸ் கட்சி அனுமதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சட்ட நடைமுறைக்கு விட்டு விடுவதே பாஸ் கட்சியின் நிலைப்பாடாகும். விசாரணையின் முடிவுக்காகக் காத்திருப்போம் என்று தக்கியுடின் தெரிவித்தார்.
கால்நடைத் திட்டத்திற்காக நில உரிமைகளைப் பெற்றுத் தர பாடாங் செராய் எம்.பி. டத்தோ அஸ்மான் நஸ்ருடின் 4 லட்சம் ரிங்கிட்டை லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவர் நேற்று எஸ்பிஆர்எம் - மினால் கைது செய்யப்பட்டார்.








