துவாரான், நவம்பர்.28-
சபா மாநிலத்தின் 17 ஆவது சட்டமன்றத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. 73 தொகுதிகளில் 596 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சீரற்ற வானிலை நிலவி வந்த போதிலும் 60 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகலாம் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
முந்தைய சபா தேர்தல்களின் போது வாக்குப்பதிவு விழுக்காட்டையும் இந்த எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்பிஆர் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.
நாளைய வாக்களிப்பில், வாக்காளர்கள் திரண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். சபா தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆயத்த நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு துவாரனுக்கு வருகை தந்த ரம்லான் ஹாருன் செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.
வாக்குச் சாவடிகள் காலை 7.30 மணிக்குத் திறக்கப்பட்டு, மாலை 5 வரை திறந்திருக்கும் என்று வாக்காளர்களுக்கு அவர் நினைவூட்டினார். சில இடங்களில் 5 மணிக்கு முன்னதாகவே வாக்களிப்பு மையங்கள் மூடப்படும். மழை பெய்யும் என்று ஆருடம் கூறப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் காலையிலேயே வருகை தந்து வாக்களிக்குமாறு ரம்லான் ஹாருன் கேட்டுக் கொண்டுள்ளார்.








