பாடாங் செராய், ஜனவரி.17-
கெடா, பாடாங் செராய் நாடாளுமன்றத்தில் மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது 16வது பொதுத்தேர்தலில் அங்கு போட்டியிடுவதற்கான அறிகுறி அல்ல என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கெடா பிகேஆர் தலைவரான சைஃபுடின், பொதுத்தேர்தலில் போட்டியிடுவது அல்லது போட்டியிடும் இடம் குறித்து எந்த முடிவும் இன்னும் எடுக்கவில்லை என்றார்.
மத்திய அரசாங்கத்தின் நன்மைகளை பாடாங் செராய் மக்கள் பெறுவதற்காகவே இந்த மையம் திறக்கப்பட்டது என்று அவர் தெளிவுபடுத்தினார்.
நேற்றிரவு, பாடாங் செராய், லூனாஸில் மக்கள் சேவை மையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்ட நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சைஃபுடின் இதனைத் தெரிவித்தார்.
கூட்டணி ஒத்துழைப்பு குறித்துப் பேசிய சைஃபுடின், பாரிசான் நேஷனல் உடனான தற்போதைய உறவு வலுவாக இருப்பதாகவும், ஒற்றுமை அரசாங்கம் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் கால் பதித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
2020-ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழலைப் போலன்றி, தற்போதைய அரசாங்கம் நிலையாக இருப்பதாகவும், வரும் பொதுத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து விவாதிப்பது இன்னும் ஆரம்பக் கட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கெடா மாநில பிகேஆர் கூட்டத்தில் பேசிய அவர், மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் தங்களுக்கு அரசாங்கத்தை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், மக்களுக்குத் தீர்வுகளை முன்வைக்கும் பொறுப்பும் இருப்பதாகக் கூறினார்.
அதே வேளையில் கெடா மாநில வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்து, அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் மாநில அரசாங்கத்திடம் பேசி தீர்வு காணப் போவதாகவும் சைஃபுடின் உறுதியளித்தார்.








