கோலகுபு பாரு, மே 08-
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள வேளையில் இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தனது வேட்பாளரை நிறுத்தியிருக்கும் டிஏபி- யின் தேர்தல் பிரச்சாரத்திற்கு PKR கட்சி முழு வீச்சில் உதவவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை டிஏபி-யின் தேசிய அமைப்புச் செயலாளரும் மனித வள அமைச்சருமான ஸ்டீவன் சிம் மறுத்துள்ளார்.
தமக்கு கிடைத்த தகவலின்படி, இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிதான் பிளவுப்பட்டுள்ளது என்று ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
பெரிக்காத்தான் நேஷனலின் பிரதான உறுப்புக்கட்சியாக விளங்கும் பெர்சத்து- வில் இரண்டு , மூன்று அணிகளாக உருவாக்கியுள்ள தரப்பினருக்கு எதிராக பாஸ் புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்று தெரியவந்துள்ளதாக ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.
ஆனால்,ஒற்றுமை அரசாங்கத்தில் அப்படி அல்ல,அதில் இடம் பெற்றுள்ள அனைத்து கட்சிகளுமே தங்களின் பங்களிப்பாக டிஏபி வேட்பாளர் பாங் சாக் தாவோ- வின் வெற்றியை உறுதி செய்வதற்கு முழு வீச்சில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஸ்டீவன் சிம் தெளிவுபடுத்தினார்.
இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் உறுப்புக்கட்சியான PKR- க்கு தேர்தல் நிதி ஒதுக்கீடு கிடைக்காததால், அதன் அடிமட்டத் தொண்டர்கள் அதிருப்தியுற்று, தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று PKR தலைவர் ஒருவர் கூறியதாக வெளிவந்துள்ள தகவலைத் தொடர்ந்து ஸ்டீவன் சிம் எதிர்வினையாற்றியுள்ளார்.








