கோலாலம்பூர், டிசம்பர்.14-
பெர்சத்து கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் கட்சிப் பணத்தைத் திருடி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக முஹிடின் காவற்படையில் புகார் அளிக்க வேண்டும் என பி.கே.ஆர். இளைஞரணி தலைவர் கமீல் முனிம் வலியுறுத்தியுள்ளார். நிதியமைச்சரின் அரசியல் செயலாளராகவும் உள்ள கமீல், மஹாதீரின் இந்தக் குற்றச்சாட்டு நம்பிக்கை மோசடியுடன் தொடர்புடைய மிக மோசமான குற்றமாகும் என்று சுட்டிக் காட்டினார்.
ஒரு வேளை மகாதீர் சொல்வது பொய் என்றால், அவர் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 இன் கீழ் அவதூறு செய்த குற்றத்தைப் புரிந்திருக்கிறார் என்றும், எனவே முஹிடின் தனது பெயரைக் காப்பாற்ற காவற்படை புகார் அளிப்பது கட்டாயமாகும் என்றும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்தக் காணொளி 'சட்டவிரோத சக்திகளால்' திரித்துக் கூறப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள ஜோகூர் பெர்சத்து இளைஞரணி, மகாதீருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.








