கோலாலம்பூர் டிச.11-
போலீசாரால் தேடப்பட்டு வரும் ஜோ லோவின் மூலமாக 1எம்.டி.பி. நிதியில் ஒரு பகுதியை லஞ்சமாக பேங்க் நெகாரா மலேசியாவின் முன்னாள் கவர்னர் டான்ஸ்ரீ ஷெடட் அக்தார் அஸிஸ் அல்லது அவரின் கணவர் தாவ்பிக் அய்மான் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் எழுப்பியுள்ள கேள்வியில் நியாயம் உள்ளது என்று முன்னாள் சட்டத்துறை தலைவர் டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.
தனக்கு கிடைக்கப்பெற்ற ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு நஜீப் இக்கேள்வியை முன்வைத்திருப்பதாக மலேசிய கினிக்கு அளித்த பேட்டியில் டோமி தோமஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கில் நாட்டின் மத்திய வங்கிக்கு தலைமையேற்றவர் என்ற முறையில் ஸெட்டி மீதும், அவரின் கணவர் தாவ்பிக் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான சாத்தியத்தை டோமி தோமஸ் மறுக்கவில்லை. ஆனால் ஸெட்டியின் கணவர் குறித்து நிறையத் தகவல்களை சிங்கப்பூரிலிருந்து பெற்றோம். அந்தப் பணத்தையும் நாங்கள் மீண்டும் கைப்பற்றி விட்டோம் . அந்த பணம் அனைத்தும், ஷெட்டியின் கணவர் தாவ்பிக் பெயரில் இருந்தது. அந்தப் பணத்தை மலேசியாவிற்கு மீண்டும் கொண்டு வருவதில் அவரும் ஆட்சேபிக்கவில்லை என்று 1எம்டிபி விசாரணைக்கு தலைமையேற்ற சட்டத்துறை தலைவரான டோமி தோமஸ் விவரித்தார்.
அதேவேளையில் அந்தப் பணம் அனைத்தம் ஜோ லோவிற்கு சொந்தமானது என்பதை ஷெட்டியின் கணவர் ஒப்புக்கொண்டார்.
1MDB யுடன் தொடர்புடைய 15.4 மில்லியன் அமெரிக்க டாலர், ஷெட்டியின் கணவர் தவ்பிக் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் நிறுவனக் கணக்கிலிருந்து மீட்கப்பட்டதாக தோமஸ் விளக்கினார்.








