கோத்தாகினபாலு, நவ. 16-
அரசாங்க குத்தகைகளை பெற்றுத் தருவதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள், குத்தகையாளர்களிடம் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு, பேரம் பேசியதாக கூறப்படும் காணொளி இருப்பதாக மிரட்டப்பட்டு வருவது, சபா அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தும் முயற்சியாகும் என்று மாநில முதலமைச்சர் ஹஜிஜி நூர் தெரிவித்துள்ளர்.
தமது தலைமையிலான அரசாங்கம் ஊழல் நிறைந்தது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்த போதிலும், சபா அரசாங்கம் இன்னமும் வலிமையுடன் இருப்பதாக நேற்று 2025 ஆம் ஆண்டுக்கான சபா மாநில பட்ஜெட்டை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் முதலமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபா சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் லஞ்ச ஊழல் பேரம் தொர்பான காணொளி இருப்பதாக அகப்பக்க செய்தி நிறுவனம் ஒன்று கூறிக்கெண்ட போதிலும் அது குறித்து தற்போதைக்கு தம்மால் கருத்துரைக்க இயலாது என்று ஹஜிஜி நூர் தெரிவித்தார்.
இந்த லஞ்ச ஊழலில் சபா துணை முதலமைச்சர் ஷாஹெல்மே யாயா , நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக அந்த அகப்பக்கம் கூறுகிறது.
இந்த விவகாரத்தின் பின்னணியில் குறிப்பிட்ட அம்சங்கள் மேலோங்கியிருப்பதால் , தற்போதைக்கு இது குறித்து கருத்துரைப்பது கடினம் என்று முதலமைச்சர் ஹஜிஜி நூர் தெரிவித்தார்.








