கோலாலம்பூர், டிச. 11-
தற்போது சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் தமது தந்தை டத்தோ நஜீப் துன் ரசாக்கின் விடுதலைக்கு போராடுவதில் அம்னோ பலவீனமாக காணப்படுகிறது என்று நஜீப்பின் மகன் நஸிபுடின் நஜீப் தெரிவித்துள்ளார்..
தமது தந்தை நஜீப், எஞ்சிய 6 ஆண்டு கால சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படும் அரசாணை விவகாரத்தில் தமது தந்தையை விடுவிப்பதில் அம்னோ மிகுந்த மவுனம் சாதித்து வருவதாக நஜீப் மகன் இன்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
அம்னோ இவ்வாறு அமைதி காப்பது, பாஸ் கட்சியை ஒரு ஹீரோவைப் போல சித்தரிக்கச் செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தம்முடைய தந்தையை விடுவிப்பதற்காக அம்னோ தொடர்ந்து போராடினாலும், தமது தந்தைக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை விவகாரத்தில் அம்னோ மவுனம் சாதித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
தமது தந்தையின் அரசாணை குறித்து விளக்கம் அளிக்குமாறு பாஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கோத்தா பாரு எம்.பி.யுமான தக்கியுடின் ஹசான்,நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடி வருவதை நஜீப் மகன் சுட்டிக்காட்டினார்.