கோலாலம்பூர், டிச. 23-
சபா அம்னோ முன்னாள் தொடர்புக்குழுத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான துன் மூசா அமான், மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
மூசா அமானின் நியமனத்தை கேள்வி எழுப்புவது, மறைமுகமாக மாமன்னரை கேள்வி எழுப்புவதற்கு ஒப்பாகும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டல்ஹான் தெரிவித்துள்ளார்.
மூசா அமான் லஞ்ச ஊழலில் சிக்கியவர் என்று அபாண்டாகவும், பகிரங்கமாகவும் குற்றஞ்சாட்டுவது கடுமையான குற்றமாகும் எனப்தையும் அவர் தெளிவுபடுத்தினார்.
சபா மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த போது, வெட்டுமரம் குத்தகை தொடர்பில் லஞ்ச ஊழல் புரிந்ததாக நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, தனக்கு எதிரான 46 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிருந்து விடுதலை செய்யப்பட்ட 73 வயது மூசா அமான், சபா மாநிலத்தின் உயரிய பதவியான ஆளுநருக்கு நியமிக்கப்பட்டது குறித்து சில தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருவது குறித்து கருத்துரைக்கையில் அப்துல் ரஹ்மான் டஹ்லான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.