கோலாலம்பூர், செப்டம்பர்.06-
வரும் பொதுத் தேர்தலில் மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் கைகோர்த்து ஒத்துழைப்பது மூலம் பெரிக்காத்தான் நேஷனல் கூடுதலாக 15 முதல் 22 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற முடியும் என்று அதன் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது ஒவ்வொரு தொகுதியிலும் பல்முனைப் போட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்கும் என்பதுடன் மேலும் அதிகமான சமூகத்தைக் கவர்ந்திழுக்க பரந்த இடத்தைத் தரும். இதன் மூலம் பெரிக்காத்தான் நேஷனல், 2 முதல் 5 விழுக்காடு வரை கூடுதல் வாக்காளர்களைக் கவர முடியும் என்று முன்னாள் பிரதமருமான டான் ஶ்ரீ முகைதீன் குறிப்பிட்டார்.
கூடுதலாக 5 விழுக்காடு ஆதரவு என்பது மிக முக்கியமானதாகும். காரணம், கடந்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல், பல தொகுதிகளில் மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விக் கண்டுள்ளது என்று முகைதீன் விளக்கினார்.
அரசியல் கட்சிகள், தங்களுக்கு இடையில் மோதாமல் பிரதானக் கட்சிகளுக்கு வழிவிடுமானால் பெரிக்காத்தான் நேஷனல் கூடுதலாக 20 க்கு மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் சாத்தியம் உள்ளது என்று உள்ளூர் நாளேட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் டான் ஶ்ரீ முகைதின் தெரிவித்தார்.
தற்போது மக்களவையில் பெரிக்காத்தான் நேஷனல் 68 இடங்களைக் கொண்டுள்ளது. இதில் பாஸ் கட்சி 43 இடங்களையும் பெர்சத்து 25 இடங்களையும் கொண்டுள்ளது.
எனினும் பெரிக்காத்தான் நேஷனல், இன்னமும் மலாய்க்கார முஸ்லிம் கட்சிகளின் கூட்டணி என்ற பார்வைத் தொடர்ந்து இருந்து வருவதை முகைதீன் ஒப்புக் கொண்டார். அந்த பார்வையிலிருந்து விடுபட மலாய்க்காரர் அல்லாத கட்சிகளுடன் கைக்கோர்ப்பது அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.