ரியோ டி ஜெனிரோ, நவ. 19-
பசி, பட்டினி, வறுமை துடைத்தொழிக்கப்படுவதற்கு பிரேசில் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய கூட்டணியில் ஓர் அங்கமாக மலேசியா இணைந்தது.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் ஜி20 உலகத் தலைவர்களுக்கான மாநாட்டில் பசி, பட்டினி, வறுமை துடைத்தொழிக்கப்படுவதற்கான திட்டத்தை விரிவுப்படுத்துவதற்கு அந்த அனைத்துலக அமைப்பு உறுதிப்பூண்டுள்ளது.
ஓர் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் இந்த உலகளாவிய கூட்டணியில் இணைவதன் மூலம் பசி,பட்டிணி, வறுமையை எதிர்ததுப் போராடும் 2030 ஆம் ஆண்டுக்கான இலக்கை அடைவதற்கான முயற்சியில் மலேசியா உறுதியாக இருப்பதாக ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டு முயற்சி வெற்றிபெறுவதற்கு மலேசியாவில் தமது தலைமையிலான மடானி பொருளாதார கட்டமைப்பின் மூலம் மக்களின் நலனை மேம்படுத்தும் முயற்சிகள் துரித வேகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் தற்போதைய கவனம், நிர்வாக கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், நிலைத்தன்மையான நிதி வளத்தை உறுதி செய்தல், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவித்தல், இலக்கவியல் மாற்றத்தை மேம்படுத்துவது மற்றும் கால நிலைக்கு ஏற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியவையாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் விளக்கினார்








