Oct 25, 2025
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் வெள்ளம் : 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
அரசியல்

6 மாநிலங்களில் வெள்ளம் : 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Share:

கோலாலம்பூர், நவ. 28-


ஆறு மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

கிளந்தான், திரெங்கானு, கெடா, பெர்லிஸ், ஜோகூர் மற்றும் பேரா ஆகிய ஆறு மாநிலங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த வெள்ளப் பேரிடரில் 9 ஆயிரத்து 223 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்து 582 பேர் நேரடியாக பாதிக்கப்பட்டு இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளந்தான் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளந்தானில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் 157 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9.32 மணி வரை கிடைக்கப்பெற்ற நிலவரப்படி, ஆறு மாநிலங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 385 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை, ஆகக்கடைசி நிலவரப்படி 37 ஆயிரத்து 189 பேராக அதிகரித்துள்ளதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களை வெள்ளப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதிலும், அவர்களை நிவாரண மையங்களுக்கு கொண்டு செல்லுவதிலும், உரிய உதவிகளை வழங்குவதிலும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முழு மூச்சாக பாடுபட்டு வரும் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி மற்றும் தேசிய பேரிடர் நிர்வாக மையமான நட்மா ஆகியவற்றுக்கு பிரதமர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News