வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள 2023 ஆம் ஆண்டிற்கான அம்னோ பேராளர் மாநாட்டின் தொடக்க விழாவில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கும் பிரதமரும், பக்காத்தான் ஹராப்பானின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வருகையை அம்னோவின் உறுப்பினர்கள் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுமாறும் அம்னோ பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ அமாட் மஸ்லான் கேட்டுக்கொண்டார்.
மேலும், இந்த மாநாட்டைப் புறக்கணிக்க விரும்புவதாகக் கூறப்படும் ஒரு சிலரின் நடவடிக்கைகளால் மற்றவர்கள் பாதிக்கப்பட வேண்டாம் என்று அமாட் மஸ்லான் அம்னோ உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
பிரதமர் அன்வார் மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளின் 18 தலைவர்களை இந்த அம்னோ பேராளர் மாநாட்டிற்கு அழைப்பது என்பது விரைவில் நடைபெற உள்ள ஆறு மாநிலங்களில் சட்ட மன்றத் தேர்தலுக்கு தயாராகுவது போன்றாகும் என்று துணை நிதி அமைச்சருமான அமாட் மஸ்லான் கூறினார்.