கோலாலம்பூர், ஜனவரி.02-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகி விட்டாலும் கூட, பெர்சாத்து கட்சியானது அக்கூட்டணியில் கொள்கை ரீதியான, விசுவாசமான பங்காளியாக இருப்பதாக அதன் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் நிலவி வரும் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில், இந்த ஒத்துழைப்பானது, கூட்டணியைத் தொடர்ந்து வலுவான நிலையில் வைத்திருப்பதோடு, எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் என்றும் முகைதீன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புத்தாண்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான குழப்பங்கள் நீங்கி, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இருக்கும் குழப்பமான சூழ்நிலையானது, கூட்டணியின் பலவீனம் அல்ல என்று குறிப்பிட்டுள்ள முகைதீன், இந்த தலைமைத்துவ மாற்றம் ஒற்றுமைக்கான அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக முகைதீன் யாசின் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








