கோத்தா கினபாலு, நவம்பர்.15-
சபா சட்டமன்றத் தேர்தலில் Moyog தொகுதியில் உள்ள மக்களின் நீடித்த வளர்ச்சி மற்றும் நிலையான திசையை நோக்கிய அவர்களின் அபிலாசைகள், சபா மாநிலத்திற்குப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பால் வலுப்படுத்தப்படுகின்றன என்று பிகேஆர் தேசிய உதவித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.
பெனம்பாங் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான Moyog,- கில் மக்கள் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் கெளரவமிக்க மாநிலமாக சபாவின் அபிலாஷைகளுக்கு ஏற்ப சமூக ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை உறுதிச் செய்யும் திறன் கொண்ட தலைமையை விரும்புகிறார்கள் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
சபாவில் தொடர்ச்சியாகக் களம் இறங்கி மக்களைச் சந்தித்து வரும் பிரதமரின் நிலையான அணுகுமுறையால் இந்த நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் ஒவ்வொரு வருகையும் மாநில மக்களின் வளர்ச்சியை வலுப்படுத்த தெளிவான கொள்கைகள் மற்றும் உறுதிப்பாடுகளுடன் இருப்பதாக தொழில்முனைவர்கள் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோ ஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.
இன்று சனிக்கிழமை சபா சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலில் பலம் பொருந்திய சட்டமன்றத் தொகுதியான Moyog-கில் போட்டியிடும் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் Remysta Jimmy Taylor- க்கு ஆதரவாக, அவருடன் இணைந்து பக்காத்தான் ஹராப்பானின் ஆயிரம் ஆதரவாளர்களுடன் புடை சூழ, வேட்புமனுத் தாக்கல் மையமான டேவான் கெபுடாயாஆன் பெனம்பாங் மண்படத்திற்கு வந்த போது, செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ ஶ்ரீ ரமணன் இவ்வாறு குறிப்பிட்டார்.
"இன்று நாம் காணும் வளர்ச்சியானது, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வாரின் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள மடானி அரசாங்க நிர்வாகம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும்.
ஒரு தலைவர், அடிக்கடி சபா மாநிலத்திற்கு வருவது மட்டுமின்றி சபாவின் வளர்ச்சியை வலுப்படுத்தத் தெளிவான உறுதிமொழிகளையும் கொள்கைகளையும் கொண்டு வருகிறார் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Moyog சட்டமன்றத் தொகுதியில் பிகேஆரைச் சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர், ஆளும் GRS கட்சி வேட்பாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.








