நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கத்தின் நிர்வாக மன்றத்திற்கு, மாநில அரசு செயலாளர் மற்றும் மாநில சட்ட ஆலோசகரின் பணிகளை இடைநீக்கம் செய்ய சட்டப்படி அதிகாரம் இல்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகமான ஏஜிசி தெரிவித்துள்ளது.
மாநில அரசு செயலாளர் மற்றும் மாநில சட்ட ஆலோசகரின் நியமனம், பணியிடைநீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள், மாநில அரசமைப்புச் சட்டத்தின் 37-வது பிரிவின்படி, பொது சேவை ஆணையம் மற்றும் நீதித்துறை மற்றும் சட்ட சேவை ஆணையத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என ஏஜிசி கூறியுள்ளது.
மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், நேற்று முதல் அமலுக்கு வரும் வகையில் மாநில அரசு செயலாளர் டத்தோ முகமட் ஸாஃபிர் இப்ராஹிம் மற்றும் மாநில சட்ட ஆலோசகர் டத்தோ முஸல்மா முஸ்தபா கமாலை இடைநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார்.
மேலும், மாநில நிதி அதிகாரி டத்தோ மஸ்ரி ரசாலி, புதிய மாநில அரசு செயலாளர் நியமிக்கப்படும் வரை அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும், வழக்கறிஞர் ஃபஹ்மி அடிலா, புதிய மாநில சட்ட ஆலோசகர் நியமிக்கப்படும் வரை சட்ட ஆலோசனை வழங்குவார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.








