கோலாலம்பூர், ஜூன்.01-
பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியது, அம்னோவைச் சேர்ந்த ஓர் அமைச்சர் கட்சித் தாவியது தொடர்பில் அமைச்சரவை சீரமைப்புக்கு அவசரமில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். மற்றொரு முன்னாள் உதவித் தலைவரான நிக் நஸ்மி நிக் அஹ்மாட், தாம் வகித்து வந்த இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் பதவியைத் துறந்தார்.
வர்த்தகம், முதலீடு, தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், அம்னோவிலிருந்து விலகியது முதலிய காரணங்களினால் அமைச்சரவையை உடனடியாகச் சீரமைப்பு செய்ய வேண்டும் என்பதற்கான அவசரமில்லை என்று அன்வார் குறிப்பிட்டார்.
அரசாங்கம் எவ்வித தோய்வின்றி வழக்கம் போல செயல்படுகிறது. எனவே அமைச்சரவைச் சீரமைப்புக்கு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்று அன்வார் விளக்கினார்.
அம்னோவிலிருந்து விலகி, பிகேஆர் கட்சியில் சேரப் போவதாக அறிவித்துள்ள தெங்கு ஸாஃப்ருல் விவகாரம் இன்னும் விவாதிக்கப்படவில்லை என்பதையும் அன்வார் தெளிவுபடுத்தினார்.








