பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-
நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, ஒற்றுமை அரசாங்கம்
ஆட்சியமைப்பதற்கு, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு ஜி.பி.எஸ்,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -மிக்கு ஆதரவளித்துள்ளது.
அந்த உதவிக்கு கைம்மாறாக, 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய சரவாக் சட்டமன்ற தேர்தலில், அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சி போட்டியிடக்கூடாது என தேசிய பேராசிரியர் மன்றத்தைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ஜெனிரி அமீர் ஆலோசனை விடுத்தார்.
சரவாக் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால், தோல்வி காண வேண்டிய சாத்தியத்தை நன்கறிந்துள்ள பிகேஆர் கட்சி, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, ஜி.பி.எஸ்-சின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதில், இப்பொழுதிலிருந்தே கவனம் செலுத்துவது அவசியம் எனவும் டாக்டர் ஜெனிரி அமீர் கூறினார்.








