கோலாலம்பூர், டிச.16-
மற்றவர்களின் தவற்றினாலும், முட்டாள்தனத்தாலும் பத்து பூத்தே தீவு உட்பட மூன்று தீவுகள் சிங்கப்பூரிடம் இழந்ததற்கு துன் மகாதீரை குறைகூறும் தரப்பினரை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் சாடினார்.
மலேசியாவின் சொந்த பிரதேசமாக விளங்கிய சிங்கப்பூரை தாரை வார்த்துக்கொடுத்த விவகாரத்தை விட பத்து பூத்தே உட்பட மூன்று சிறிய தீவு விவகாரத்தில் நடப்பு அரசாங்கம் அதீத கவனம் செலுத்தி, நாடகமாடி வருவதாக அப்துல் ஹாடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டின் வரலாற்றில் என்ன நடந்தது என்பது குறித்து படித்து, அறிந்துக்கொள்ள முடியாத அளவிற்கு நிறைய எழுத்து குருடர்கள் உள்ளனர். கடந்த கால தவற்றை ஒரு படிப்பிணையான கொள்ள அவர்கள் தவறியுள்ளனர் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
பத்து பூத்தே தீவு விவகாரத்தில் துன் மகாதீரை குறைகூறுவது, முழு பூசனிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும் என்று அந்த முன்னாள் பிரதமரை ஹாடி அவாங் தற்காத்துப் பேசினார்.
வரலாற்றுப்பேராசிரியர் மறைந்த நிக் அனுபார் நிக் மாமூட் தம்மிடம் கூறி தகவலின்படி, கடந்த 1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் தேதி பத்து பூத்தே தீவை சிங்கப்பூரிடம் ஒப்படைப்பதற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
துன் மகாதீர் நாட்டின் பிரதமராக வருவதற்கு முன்பே நடந்த இந்த வரலாற்று உண்மையை தெரியாதவர்கள், அந்த தீவை இழந்ததற்கு துன் மகாதீரே காரணம் என்று கூறி, குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்று ஹாடி அவாங் தெரிவித்தார்.