கங்கார், டிசம்பர்.29-
பெர்லிஸ் மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டுள்ள அபு பாக்கார் ஹம்ஸா, மாநிலத்தில் நிலவும் அரசியல் குழப்பம் விரைவாகத் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெரிக்காதான் நேஷனல் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கிடையேயான நல்லுறவைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டிக் காட்டிய அவர், நீடிக்கும் அரசியல் மோதல்கள், கூட்டணியின் ஒற்றுமையையும் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி, அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொண்டு, உடனடி தீர்வை நோக்கிச் செயல்பட வேண்டும் என்றும் அபு பாக்கார் ஹம்ஸா கேட்டுக் கொண்டார்.
பாஸ் கட்சியும், பெர்சாத்து கட்சியும் ஒரே குடும்பம் என்றும், பதவிக்காலம் முடியும் வரை, இந்த உறவானது நல்ல முறையில் தொடரும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ் மாநிலத்தை மற்ற மாநிலங்களுக்குச் சமமாக வளர்ச்சியடையச் செய்வதே தமது முதன்மை இலக்கு என்று குறிப்பிட்ட அவர், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.








