கோலாலம்பூர், ஜனவரி.17-
தான் ஒரு சுயநலவாதியாகவும், சொந்த அரசியல் நலன்களுக்கு முன்னுரிமை கொடுப்பவராகவும் இருந்திருந்தால், ஜசெக உடன் கைகோர்க்க முடிவு செய்திருக்கலாம் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.
ஆனால் தனது கொள்கைகளில் உறுதியாக இருப்பதால் தான், மலாய்-முஸ்லிம் ஒற்றுமையை வளர்க்க போராடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வேளை தான் ஜசெக-வுடன் இணைந்து செயல்படும் பட்சத்தில், தற்போது பாஸ் கட்சியைச் சேர்ந்த ஸுல்கிஃப்லி இஸ்மாயிலின் வசம் உள்ள ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியில், தன்னால் மிகப் பெரிய வெற்றியைப் பெற முடியும் என்றும் ஜாசின் அம்னோ பிரிவின் தலைவருமான அக்மால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் வாக்குகளை ஒன்றிணைத்தால், ஜாசின் நாடாளுமன்றத் தொகுதியில் மிகப் பெரிய அளவிலான வெற்றி சாத்தியம் என்றும் அக்மால் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், தான் வெற்றுப் பேச்சு பேசுவதாக மக்கள் நினைக்கக்கூடும் என்று தெரிவித்துள்ள அக்மால், மலாய் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் கொள்கையில் தான் இன்று வரை உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








