இன மற்றும் மதத் துவேஷங்களைத் தூண்டும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்குக் கடுமையான தொனியில் எச்சரிக்கை விடுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இத்தகையச் செயல்கள் இறுதியில் நாட்டின் நல்லிணக்கத்தைச் சிதைத்து விடும் என்று நினைவுறுத்தினார். கோம்பாக்கில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்திய அன்வார், மாநிலத் தேர்தல்கள் முடிந்தவுடன் தாம் ஆட்சியாளர்களுடன் சந்திப்பு நடத்தவுள்ளதாகக் கூறினார்.
பிரிவினைப் போக்கை கடைபிடிக்கும் தரப்பினர் தொடர்பான விவகாரங்களை கையாளுவதற்கான மேலும் ஆக்ககரமான வழிவகைகளை ஆராய்வதற்கு இச்சந்திப்பை தாம் நடத்தவுள்ளதாக அவர் சொன்னார். நான் மாமன்னருடனும் சிலாங்கூர் சுல்தானுடனும் சந்திப்பு நடத்தியுள்ளேன். அது அரசியல் தொடர்பான சந்திப்பு அல்ல. நீங்கள் யாரை அல்லது எந்த கட்சியை ஆதரிக்கிறீர்கள் என்று எனக்கு கவலையில்லை. நீங்கள் சமயத்தின் மீது சவாரி செய்தால் உரிய நடவடிக்கைக்கு ஆளாகுவீர்கள் என்று சுமார் 4 ஆயிரம் பேர் முன்னிலையில் உரையாற்றுகையில் பிரதமர் அன்வார் எச்சரித்தார்.








