கோலாலம்பூர், நவ. 27-
அடுத்த பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளருக்கான வாய்ப்பு தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சி தொடர்ந்து அறைகூவல் விடுத்து வரும் வேளையில் அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து கூட்டணியின் உச்சமன்றம் முடிவு செய்யும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.
ஜோகூர் சட்டமன்ற உறுப்பினர், ஜோகூர் மந்திரி பெசார், மத்திய அமைச்சர், துணைப்பிரதமர், பிரதமர் என தனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் பல்வேறு பரிணாமங்களில் முக்கியப் பொறுப்பு வகித்தவர் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் ஆவார்.
இந்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலில் தொடர்ந்து பிரதமர் வேட்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளப் போகிறாரா அல்லது அந்தப் பொறுப்பை அக்கூட்டணியில் அதிகமான நாடாளுமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள பாஸ் கட்சியினரிடம் வழங்கப் போகிறாரா என்பது குறித்து கூட்டணியின் உச்சமன்றமே தீர்மாணிக்கும் என்று 77 வயது முகைதீன் அறிவித்துள்ளார்.
மலேசியாவின் எட்டாவது பிரதமராக பொறுப்பேற்ற டான்ஸ்ரீ முகைதீன், மீண்டும் பிரதமர் பொறுப்பை வகிப்பதற்கு எண்ணம் கொண்டிருந்த போதிலும் அதற்கு பாஸ் கட்சி முட்டுக்கட்டையாக இருக்குமா? அல்லது இருக்காதா என்பதை நான்கு உறுப்புக்கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் உச்சமன்றம் கைகளில்தான் உள்ளது.








