நாளை நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில், ஜசெக. சார்பில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் ஸ்குடாய் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன், தாம் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துத் தீர்க்கப் பாடுபடப்போவதாகப் பலத்த உறுதியளித்துள்ளார்.
குறிப்பாக, ஸ்கூடாய் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்படும் தொடர்ச்சியான வெள்ள அபாயத்தைத் தடுக்க, பழைய வடிகால் அமைப்புகளை மறுஆய்வு செய்து கனமழையைத் தாங்கக்கூடிய விரிவான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, முறையான நதிப் பராமரிப்பு மற்றும் வடிகால் தூய்மைப்படுத்தல் மூலம் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தீவிரமாகப் பாடுபடப்போவதாக கார்த்தியாயினி உறுதியளித்துள்ளார்.
மேலும், தொகுதியில் அதிகரித்து வரும் மூத்த குடிமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, பொது வசதிகள், ஆரோக்கியமான பொழுதுபோக்கு இடங்கள், பூங்காக்கள் மற்றும் மலிவு விலை வீடுகளை மேம்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைத்து மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவை வலுப்படுத்துவதன் மூலம் அவசர காலங்களில் மக்களுக்குத் துரிதமான உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும் என வாக்குறுதி அளித்துள்ள கார்த்தியாயினி, ஸ்கூடாய் பகுதியை ஒரு பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் முற்போக்கான தொகுதியாக மாற்ற தமக்கு வாக்களித்து ஆதரவளிக்குமாறு தொகுதி மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.








