நாளை ஜோகூரில் நடைபெறவுள்ள 16-வது மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களாகப் பதிவு செய்துள்ள ஊழியர்கள், தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், அவர்களுக்கு போதுமான நேரம் வழங்குமாறு முதலாளிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் செயலாளர் கைருல் ஷஹ்ரில் இத்ருஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்ல போதுமான நேரம் வழங்காமல் இருக்கக்கூடும் என பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 1954-ஆம் ஆண்டின் தேர்தல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 25-இன் விதிமுறைகளை அனைத்து முதலாளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் கைருல் வலியுறுத்தியுள்ளார்.
வாக்களிக்கச் செல்வதற்காக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்வது, ஊதியத்தை குறைப்பது அல்லது வேறு எந்த வகையிலும் தண்டனை விதிப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகிய ஊழியர்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை சுதந்திரமாகப் பயன்படுத்துவதற்கு முதலாளிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.








