Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ரமலான் மாதம் முழுவதும் சுங்கை பூலோவில் 7,000 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் விநியோகம் - டத்தோஶ்ரீ ரமணன்
அரசியல்

ரமலான் மாதம் முழுவதும் சுங்கை பூலோவில் 7,000 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் விநியோகம் - டத்தோஶ்ரீ ரமணன்

Share:

சுங்கை பூலோ, மார்ச் 3 –

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் உள்ள ரமலான் சந்தைகள் மற்றும் மசூதிகளில் மொத்தம் 7,000 நோன்புக் கஞ்சி பொட்டலங்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இத்திட்டத்தின் கீழ் 5,000 பொட்டலங்கள் பிரத்தியேகமாக உள்ளூர் ரமலான் சந்தைகளில் விநியோகிக்கப்படும் என்று தெரிவித்தார்.

"இதுதவிர, 'புபூர் இன்ஃபாக் ஜுமாஆத்' (Bubur Infaq Jumaat) எனும் திட்டத்தின் கீழ் 2,000 நோன்பு கஞ்சி பொட்டலங்கள் தொகுதியில் உள்ள அனைத்து மசூதிகளுக்கும் வழங்கப்படும். இது நோன்பு திறக்கும் நிகழ்வுகளைச் சிறப்பிக்கவும், அங்கு வருகை தரும் தொழுகையாளர்களுக்கு ஆதரவாகவும் அமையும்," என்று அவர் நேற்று தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சுபாங் பெர்டானா ரமலான் சந்தைக்கு நேரில் வருகை தந்த டத்தோஶ்ரீ ரமணன், அங்கிருந்த பொதுமக்களுக்கு சுமார் 300 நோன்பு கஞ்சி பொட்டலங்களை நேரடியாக விநியோகித்தார். இப்பாரம்பரிய உணவு வெறும் உணவு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் அடையாளமாகும் என்று அவர் விவரித்தார்.

"நோன்பு கஞ்சி என்பது மக்களிடையே நிலவும் ஒற்றுமை, கூட்டுப்பணி உணர்வு மற்றும் சமூக அக்கறையின் அடையாளமாகும். ஒவ்வொரு ரமலான் மாதமும் இந்தப் பாரம்பரியம் நமக்கு ஒன்றை நினைவூட்டுகிறது - ஆசீர்வாதங்கள் மற்றவர்களுடன் பகிரப்படும்போதுதான் அது முழுமையான அர்த்தத்தைப் பெறுகிறது," என்றார் அவர்.

தமது இந்த மக்கள் சந்திப்பின் போது, அவர் அங்கிருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

"மக்களின் முகத்தில் காணும் புன்னகையும் உற்சாகமும் விவரிக்க முடியாத மனநிறைவைத் தருகிறது. இதுவே ரமலான் மாதத்தின் உண்மையான நோக்கம் - உறவுகளை வலுப்படுத்துவதும், சமூகத்திற்குச் சேவை செய்வதும், மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை வளர்ப்பதுமே ஆகும்," என்று அவர் மேலும் கூறினார்.

இந்த முன்னெடுப்பு சுங்கை பூலோ மக்களிடையே ஒரு குடும்ப உணர்வையும், சமூக அக்கறையையும், வலுவான ஒற்றுமையையும் தொடர்ந்து வளர்க்கும் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

Related News