கோலாலம்பூர், அக்டோபர்.13-
தாம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டது, பிரதமராக நியமனம் செய்யப்பட்டது செல்லுபடியாகாது எனக் கூறி, தமக்கு எதிராக வழக்கறிஞர் P. வேதமூர்த்தி தொடுத்துள்ள வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த அக்டேபார் 10ஆம் தேதி டேனியல் & வோங் என்ற வழக்கறிஞர் நிறுவனம் மூலம் அன்வார் இந்த வழக்கு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
மலேசிய மக்கள் முன்னேற்றக் கட்சியின் தலைவருமான வேதமூர்த்தியின் இந்த வழக்கு மனுவானது, கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் முடிவை நேரடியாகக் கேள்வி எழுப்புவது போல் உள்ளது என்பதால் அந்த மனு ரத்து செய்யப்பட வேண்டும் என்று அன்வார் தமது வழக்கு மனுவில் வாதிட்டுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் ஒருதொகுதியின் தேர்தல் முடிவை கேள்வி எழுப்புவதாக இருந்தால் அது தேர்தல் பெட்டிஷன் வழக்கு மனு வாயிலாக மேற்கொள்ள முடியுமே தவிர தனிப்பட்ட முறையில் அது குறித்து கேள்வி எழுப்பவோ, வாதிடவோ முடியாது என்று அன்வார் தமது வாதத் தொகுப்பில் தெரிவித்துள்ளார்.