தம்மையும் மாநில ஆட்சிக்குழுவினரையும் “மரியாதையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள்” என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் விமர்சித்ததை நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ லாசிம் இஸ்மாயில் நிராகரித்துள்ளார்.
யாங் டிபெர்துவான் பெசார் பதவியில் இருந்து ஒருவரை நீக்கவோ, புதியவரை நியமிக்கவோ தாமும் மாநில ஆட்சிக்குழுவும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் அரச மரபின் மீதான பிரதமரின் அக்கறையை, தாம் மதிப்பதாகக் குறிப்பிட்டுள்ள இஸ்மாயில், ஆனால் மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழுவின் உண்மையான பங்கு குறித்த, முழுமையான தகவல்கள் இல்லாததன் அடிப்படையிலேயே பிரதமரின் விமர்சனம் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், நான்கு உண்டாங்-களின் முடிவாக முன்வைக்கப்பட்ட பிரகடனம் தொடர்பாக மாநில நிர்வாகத்தின் நிலைப்பாடு மட்டுமே மாநில ஆட்சிக்குழுவில் விவாதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட நிர்வாக நடவடிக்கைகளுக்கு, ஆட்சிக்குழு ஒப்புதல் அளித்தது, உண்டாங்-களின் அதிகாரத்தை தாங்கள் கையகப்படுத்தியதாகவோ அல்லது யாங் டிபெர்துவான் பெசார் பதவி தொடர்பாக முடிவெடுத்ததாகவோ அர்த்தமல்ல என்றும் இஸ்மாயில் லாசிம் தெரிவித்துள்ளார்.








