கோத்தாகினபாலு, டிச.14-
சபாவை தளமாக கொண்ட யோங் தெக் லீ தலைமையிலான சபா முன்னேற்றக்கட்சியான எஸ்ஏ.பி.பி. டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்தது.
சபா முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் பி.பி.எஸ். உறுப்பினருமான யோங் தெக் லீ, கூறுகையில் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக்கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டு, பெரிக்காத்தான் நேஷனல் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதாக குறிப்பிட்டார்.
நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் போட்டியிடுவதற்கு கொண்டுள்ள திட்டமானது, எஸ்ஏ.பி.பி.-யின் நிலைப்பாட்டிற்கு முரணாக உள்ளது என்று யோங் தெக் லீ குறிப்பிட்டுள்ளார்.
காரணம், சபாவில் உள்ள 73 சட்டமன்றத்தொகுதிகளிலும் சபாவை தளமாக கொண்ட உள்ளூர் கட்சிகள் போட்டியிட வேண்டும் என்பது எஸ்ஏ.பி.பி. -யின் நிலைப்பாடாகும் என்று யோங் தெக் லீ விளக்கினார்.








