நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் குறைந்தது 70 விழுக்காடு வாக்குப்பதிவுகள் கிடைக்கும் என தேர்தல் ஆணையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மழை பெய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும் கூட, வாக்காளர்கள் தயக்கமின்றி வாக்களிக்க வருமாறு தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் அஸ்மி ஷாரொம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை பாலிடெக்னிக் மெர்லிமாவில் வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அல்ல என்றும், முழு மாநிலத்திற்கான தேர்தல் என்பதால் அதிகமானோர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
மேலும், அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஆதரவாளர்கள் இன்று இரவு 11.59 மணிக்குள் நேரடி மற்றும் சமூக ஊடகப் பிரசாரங்கள் அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் நினைவூட்டினார்.
அதேவேளையில் வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும் நாளை மெட்மலேசியாவின் தகவல் படி, மழை பெய்யக்கூடும் என்பதால், வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்க வருமாறு அறிவுறுத்திய அவர், தேவைப்பட்டால் குடையைக் கொண்டு வரலாம் என்றும், மழையைக் காரணம் காட்டி வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
அதேவேளையில் தேர்தல் முடிவுகள் நள்ளிரவு வாக்கில் வெளியாக வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்ட டாக்டர் அஸ்மி ஷாரொம், வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களைச் சென்றடைவதற்கான நேரத்தைப் பொறுத்தே முடிவுகளை அறிவிக்கும் நேரம் அமையும் என்றார்.
மேலும், கனமழை, வெள்ளம் போன்ற எதிர்பாராத சூழல்களால் தாமதம் ஏற்படலாம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையில், வாக்குப்பதிவு நிலவரத்தை உடனுக்குடன் அறிந்துகொள்ளும் வகையில் OCR-VA என்ற புதிய முறையைத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம் பொதுமக்கள், அரசியல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக வாக்குப்பதிவு நிலவரத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க முடியும். முன்னர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை மட்டுமே இந்த விவரங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.








