கோலாலம்பூர், டிசம்பர்.31-
பெர்லிஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து டான் ஶ்ரீ முகைதீன் யாசின் விலகியதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என பாஸ் மத்தியச் செயலவை உறுப்பினரான அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அம்னோ பொதுச் செயலாளருமான அனுவார், லண்டனில் நேற்று முகைதீனை தான் சந்தித்ததாகவும், பெரிக்காத்தான் நேஷனலின் அரசியல் செயல்பாடுகள் குறித்து அங்கு அவருடன் விவாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சு வார்த்தையில், பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவத்தைப் பாஸ் கட்சி ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தில், முகைதீன் பதவி விலகுவதாக, தன்னிடம் தெரிவித்ததாகவும் அனுவார் குறிப்பிட்டுள்ளார்.
பெர்லிஸ் மாநிலத்தில் பெரிக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவம் மாற வேண்டும் என்ற காரணத்தினால், முகைதீன் யாசின் தாமாகவே முன்வந்து இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அனுவார் நேற்று தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், கடந்த 2020-ஆம் ஆண்டு, பெரிக்காத்தான் கூட்டணிக்கு முகைதீன் யாசின் தலைமையேற்றது முதல், பல்வேறு முக்கியப் பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அனுவார், இனி பெரிக்காத்தான் கூட்டணி மிகப் பெரிய சவால்களைச் சந்திக்கப் போவதாகவும் ஆரூடம் தெரிவித்துள்ளார்.








